ஈப்போ, மே 11- தொலைபேசி மோசடிக் கும்பல் வலையில் சிக்கிய ஊழியரால் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான 124,450 வெள்ளியை அந்நிறுவன உரிமையாளர் இழந்தார்.
நிறுவன குமாஸ்தாவான அந்த ஊழியரை வாட்ஸ்அப் வழி தொடர்பு கொண்ட மோசடிப் பேர்வழி தன்னை முதலாளி எனக் கூறிக் கொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான பணத்தை மீட்கும் படி பணித்துள்ளான் என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.
கடந்த மே 8ஆம் தேதி பிற்பகல் 1.50 மணியளவில் அந்த குமாஸ்தா ஊத்தாங் மெலித்தாங்கில் உள்ள தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது தனது முதலாளியின் எண் கொண்ட வாட்ஸ்ஆப்பில் ஒரு குறிப்பு வந்ததை கண்டுள்ளார். நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு 30,000 வெள்ளியை மாற்றும்படி அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
தன் முதலாளி தான் இந்த பதிவை அனுப்பியுள்ளார் என்ற நம்பிக்கையில் அந்த குமாஸ்தாவும் 30,000 வெள்ளியை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
இம்மாதம் 9ஆம் தேதி பிற்பகல் 1.45 மணியளவில் அந்த குமாஸ்தா நிறுவன கணக்கிலிருந்து மேலும் 8,000 வெள்ளியை மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினமே மேலும் இரு வங்கிக் கணக்குகளுக்கு தன் முதலாளியின் நிறுவன கணக்கிலிருந்து மேலும் 86,450 வெள்ளியை மாற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் இருந்த முதலாளியை அவரின் நண்பர் தொடர்பு கொண்டு கடன் பெறும் அளவுக்கு உங்களுக்கு பணப் பிரச்சனை ஏதும் உள்ளதா? எனக் கேட்ட போதுதான் ஹாட் யாயில் இருந்த போது தனது கைபேசி ஊடுருவப் பட்டுள்ளதை அந்த அவர் உணர்ந்துள்ளார்.
தொழிற்சாலைக்குச் சொந்தமான பணத்தை வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி விடவோ, நண்பர்களிடம் கடன் பெறவோ தாம் ஒருபோதும் உத்தரவிடவில்லை என்று 55 வயதான அந்த முதலாளி தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்றார் அவர்.








