கோலாலம்பூர், மே 11- இங்குள்ள ஜாலான் யாப் குவான் செங்கில் நேற்று முன்தினம் அதிகாலை நடத்தப் பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 25 வயதுடைய இரு சந்தேக நபர்களை போலீசார் பத்து கேவ்ஸில் நேற்று கைது செய்தனர்.
உள்நாட்டினரான அவ்விரு ஆடவர்களும் வீடொன்றில் நேற்று மாலை 3.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஷ்டி முகமது ஈசா கூறினார்.
கைதான சந்தேக பேர்வழிகளை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி இன்று பெறப்படும் எனக் கூறிய அவர், இந்த சம்பவத்திற்கு தீவிரவாதச் செயல் காரணமல்ல என தெளிவுபடுத்தினார்.
நேற்று இங்குள்ள செந்துல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கீழறுப்பு செயலில் ஈடுபட்டதற்காக தண்டனைச் சட்டத்தின் 435 வது பிரிவு மற்றும் குற்றவியல் ரீதியாக மிரட்டல் விடுத்ததற்கு தண்டனைச் சட்டத்தின் 506 வது பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு ஆடவர்கள் அந்த பொழுதுபோக்கு மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசுவதை சித்தரிக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன.
இதனிடையே, ஆயுதங்களை வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இஸ்ரேலிய ஆடவருடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் கைதான மூன்று அந்நிய பிரஜைகள் உள்ளிட்ட பத்து பேர் அடுத்த வாரம் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப் படுவர் என டத்தோ ருஷ்டி தெரிவித்தார்.
அந்த மூன்று அந்நிய நாட்டினரும் மேல் நடவடிக்கைக்காக குடிநுழைவு துறையிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் சொன்னார்.








