அங்காரா, ஏப் 27 - காஸா பகுதியில் இஸ்ரேலின் பேரழிவுப் போரினால் தரைமட்டமான கட்டிட இடிபாடுகளை அகற்ற சுமார் 14 ஆண்டுகள் ஆகலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மக்கள் அடர்த்தியாக வாழும் பிரதேசத்தில் 3.7 கோடி டன் குப்பைகள் மற்றும் கற்குவியல்கள் குவிந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுரங்க நடவடிக்கை சேவையின் அதிகாரி பெஹ்ர் லோட்ம்மர் ஜெனீவாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கூறினார்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் 70,000 வீடுகள் அழித்துள்ளதோடு 290,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்த வீடுகள் வசிக்கத் தகுதியற்ற நிலையில் உள்ளன. தாக்குதலைக்குள்ளான கட்டமைப்புகளில் அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வரலாற்று தளங்களும் அடங்கும்.
கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூரத் தாக்குதல்களில் 34,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில் சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியின் பெரும்பகுதியை இடிபாடுகளாக மாற்றியுள்ளது. இதனால் பெரும்பாலான குடிமக்கள் வீடற்றவர்களாகவும் பசி மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்
இதனிடையே, காஸா பகுதியில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஜெர்மன் உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் செவ்வாய்கிழமை தீர்ப்பளிப்பதாக ஜெனீவாவில் உள்ள சர்வதேச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.


