உலு சிலாங்கூர், ஏப் 27- கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு. பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தாவ் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் கைருள் அஸ்ஹாரி சவுட்டும், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா ஜைனுடினும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின்னும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கோல குபு பாரு தொகுதிக்கான தேர்தல் அதிகாரி யுஹானாஸ் அவுரி கமாருடின் அறிவித்தார்.
இதனிடையே, தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால் மற்றொரு சுயேச்சை வேட்பாளரான சிங் பூன் லாயின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இத்தொகுதியில் வரும் மே மாதம் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்கள் இன்று தொடங்கி மே 10ஆம் தேதி நள்ளிரவு வரை 14 நாட்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் மொத்தம் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 39,362 பேர் சாதாரண வாக்காளர்களாவர். மேலும் 625 போலீஸ்காரர்கள் மற்றும் 238 இராணுவ வீரர்களும் அவர்களின் துணைவியரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


