ECONOMY

பெங்கேராங்கில் மருத்துவமனையை நிர்மாணிக்க அரசு பரிசீலனை- அஸாலினா தகவல்

27 ஏப்ரல் 2024, 3:11 AM
பெங்கேராங்கில் மருத்துவமனையை நிர்மாணிக்க அரசு பரிசீலனை- அஸாலினா தகவல்

கோத்தா திங்கி ஏப் 27- பெங்கேராங்கில் புதிய மருத்துவமனையை நிர்மாணிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சைட் கூறினார்.

தமது இந்த பரிந்துரையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளதாக நேற்று இங்கு நடைபெற்ற பெங்கேராங் தொகுதி நிலையிலான நோன்பு பெருநாள் பொது உபசரிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

ரெப்பிட் எனப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகிமியா ஒருங்கிணைந்த தொகுதி திட்டத்தின் காரணமாக இப்பகுதி துரித வளர்ச்சி கண்டு வருவதோடு சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்று வருவதை கருத்தில் கொண்டு இவ்வட்டார மக்களின் வசதிக்காக இத்தொகுதியில் மருத்துவமனை தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரம் குறித்து நான் பிரதமரின் பேசியுள்ளேன். எனது இந்த பரிந்துரை பரிசீலிக்கப்படும் என அவர் வாக்குறுதியளித்துள்ளார் என்று பிரதமர் துறை அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

பெங்கேராங்கிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோத்தா திங்கி மருத்துவமனையே இத்தொகுதிக்கு அருகிலுள்ள மருத்துவமனையாக விளங்குகிறது. அதிக தொலைவு காரணமாக இப்பகுதி மக்கள் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கிறது என்றார் அவர்.

 ரெப்பிட் திட்டத்தைப் பொறுத்த வரை அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்கான வசதி உள்ளது. எனினும்,  வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் அவர்களை தரை மார்க்கமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டார்.

பெரிய மருத்துவமனையைக் நிர்மாணிக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் விபத்து மற்றும் இதர அவசர வேளைகளில் சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக ஒரு சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.