செய்தி; சு.சுப்பையா
கோல குபு பாரு.ஏப்.26- அடுத்த 10 ஆண்டுகளில் பல்லினம் கொண்ட நமது நாட்டில், அனைவரும் ஒன்று பட்டு ஒற்றுமையாக, மலேசியர்களாக நாம் வாழ வேண்டும் என்பதே தனது இலட்சியம் என்று சிலாங்கூர் மாநில ஒற்றுமை அரசின் வேட்பாளராக கோல குபு பாருவில் போட்டியிடவிருக்கும் புவான் பாங் சொக் தாவ் தெரிவித்தார்.
அம்பாங் வட்டாரத்தை பூர்வீகமாக கொண்டவர் நமது வேட்பாளர். 6 பேர்களுடம் பிறந்தவர் ஒரு இரட்டை குழந்தை. இரட்டையர்களில் கடைக் குட்டி புவான் பாங்.
தனது ஆரம்ப கல்வியை அம்பாங்கிலும் பின்னர் இடை நிலைக் கல்வியை போட்டிக்சனிலும் கற்றார். படிவம் ஒன்று முதல் ஆறு வரையில் போட்டிக்சனில் உள்ள தங்கி படிக்கும் பள்ளியில் கல்வியை மேற்கொண்டார்.
பள்ளிப் பருவத்தில் பேச்சுப் போட்டியில் கவரப்பட்ட அவர் பள்ளி அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
பின்னர் தனது பட்டப்படிப்பை தெனாகா நேசினல் பல்கலைக்கழகமான யுனிடெனில் தொடர்ந்தார்.
மலேசிய உணவுகளில் நாசி லெமாக் தன்னை மிகவும் கவர்ந்த உணவு என்று தெரிவித்தார். மலாய் பண்பாட்டு உடையும் என்னை கவர்ந்தது என்கிறார். மலேசிய பாத்தேக் உடைகள் சேகரிப்பில் தாம் இவ்வாண்டு தொடங்கியுள்ளதாக கூறினார்.
தந்தையார் மற்றும் கணவர் வழிகாட்டுதலின் பேரில் அரசியலில் ஆர்வம் வளர்ந்தது. பள்ளிப் பருவத்தில் பேச்சுப் போட்டியில் கொண்ட ஆர்வமும் அரசியல் ஈடுபட, காரணிகளில் ஒன்றாகும் என்று பாங் தெரிவித்தார்.
பொறியியல் துறை பட்டதாரியான இவர் 2017 ஆம் ஆண்டு ஜ.செ.க.வில் இணைந்தார். ஜ.செ.க.வின் பிரச்சார பீரங்கி என்று வர்ணிக்கப்படும் ''உபாக்'' தொலைக்கட்சியில் பணியாற்றினார்.
2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ராக்யாட் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதன் வழி அறிவியல் சுற்றுச்சூழல் அமைச்சின் துணை அமைச்சர் அலுவலகத்தில் அதிகாரியாக 2 ஆண்டுகள் பணியாற்றி, பின்னர் 2020 ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஜ.செ.க.வின் ''உபாக்'' தொலைக் காட்சியில் பணியாற்றினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பிறகு வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்ற அமைச்சர் ங்கா கொர் மிங் அலுவலகத்தில் உயர் அதிகாரியாக தனது சேவையை தொடர்ந்தார்.
முன்னாள் கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கி ஹியொங் மறைவுக்கு பின்னர் கோல குபு பாரு இடைத்தேர்தல் வேட்பாளராக தேர்வு பெற்றுள்ளார்.
சவால் மிக்க இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களின் மகத்தான ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்று திடமாக நம்புவதாக தெரிவித்தார்.
கோல குபு பாரு சட்டமன்றம் இரண்டு சுற்றுலா தளங்களுக்கு இடையில் இருக்கிறது. சுற்றுலா, வரலாறு மற்றும் பாரம்பரிய வளத்தை கொண்டுள்ளது. மேலும் நாட்டில் புகழ் பெற்ற கெந்திங் மலை மற்றும் பிரெசர் மலைக்கு இடையில் உள்ளது. இந்த தொகுதியை மகத்தான சுற்றுலா தளமாக உருமாற்ற பாடு படப் போவதாக கூறினார்.
அடுத்த 10 ஆண்டுகளில் பல்லினம் மற்றும் பல மதங்களை சார்ந்த மலேசியர்கள் ஒன்று பட்டு ஒற்றுமையாக இருப்பதை காண்பதே தனது இலட்சியம் என்று தெரிவித்தார்.


