காஸா நகர் , ஏப் 16 - இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேறி, இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் வரை பணயக் கைதிகள் எவரையும் விடுவிக்க சம்மதிக்க மாட்டோம் என்று பாலஸ்தீனக் குழுவான ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக திரும்பப் பெறுவதற்கும் இடம்பெயர்ந்த மக்கள் காஸா பகுதி முழுவதும் உள்ள தங்களின் பகுதிகளுக்கு சுதந்திரமாக திரும்புவதற்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை.
ஆகவே, நிரந்தர போர்நிறுத்தம் மட்டுமே எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்கும் இரத்தக்களரி மற்றும் படுகொலைகளைத் தடுப்பதற்கும் உள்ள ஒரே உத்தரவாதமாகும் என்று ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினர் இஸாட் அல்-ரிஷ்க் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தனது நாட்டு பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் பின்னர் "போர் மற்றும் இனப்படுகொலையை" மீண்டும் தொடங்குவதற்கும் ஏதுவாக "தற்காலிக (போர்நிறுத்த) உடன்படிக்கையை" இஸ்ரேல் நாடுகிறது என்று அவர் சொன்னார்.
சனிக்கிழமை (ஏப்ரல் 13), காஸாவில் ஹமாஸ் இஸ்ரேலுடனான உத்தேச போர் நிறுத்தம் குறித்து எகிப்து மற்றும் கட்டாரிடம் தனது பதிலைச் சமர்ப்பித்துள்ளதாக ஹமாஸ் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தது.
நிரந்தர போர் நிறுத்ததம் அமல் படுத்தப்பட வேண்டும், காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும், இடம்பெயர்ந்தவர்கள் இல்லம் திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும், மேலும் மனிதாபிமான உதவிகளை அப்பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை ஹமாஸ் விதித்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இதுவரை காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 33,800 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளதோடு 76,400 பேர் காயமடைந்துள்ளனர்.


