கோத்தா திங்கி, ஏப் 15- கிழக்கு ஜோகூர் கடல் பகுதியில் பழைய இரும்புகளைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து இந்தோனேசிய கடலோடிகளுடன் மரப் படகு ஒன்றையும் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் நேற்று தடுத்து வைத்தது.
பழைய இரும்புகள் ஏற்றப்பட்ட ஹெக்ஸாக்ரோ 9 என்ற
இழுவைப்படகு மற்றும் பொங்கவான் 9 என்ற விசைப்படகின் நடமாட்டம் குறித்து ஜோகூர் துறைமுக ஆணையத்திடம் இருந்து தனது தரப்பு புகாரைப் பெற்றதாக தஞ்சோங் செடிலி கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் கமாண்டர் முகமது நஜிப் சாம் கூறினார்.
லாபுவானில் இருந்து போர்ட் கிள்ளான் நோக்கிச் சென்று கொண்டிருந்த விசைப்படகு ஒன்றை நேற்று காலை 10.45 மணியளவில் தஞ்சோங் பென்யுசோப்பிலிருந்து தெற்கே 3.8 கடல் மைல் தொலைவில் அவர்கள் திருட முயன்றதாக நம்பப்படுகிறது என்று அவர் சொன்னார்.
புகார் கிடைத்ததை தொடர்ந்து அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரோந்துப் படகு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவு உறுப்பினர்களின் வருகையை அறிந்த அவர்கள் தப்பியோட முயன்றனர். ஆனால் தஞ்சோங் பென்யுசோப்பில் இருந்து தெற்கே 3.6 கடல் மைல் தொலைவில் காலை 11.50 மணியளவில் அவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப் பட்டனர் என்று இன்று தஞ்சோங் செடிலி கடல்சார் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
31 முதல் 53 வயதுடைய கடலோடிகள் அனைவரும் தஞ்சோங் செடிலி கடல்சார் மண்டலத்திற்கு மேல் நடவடிக்கைக்காக கொண்டுச் செல்லப்பட்டதாக முகமது நஜிப் தெரிவித்தார்.
எனினும், பெங்கேராங் கடல் படகுத் துறைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோது படகில் கட்டுப்படுத்த முடியாத நீர் கசிவு ஏற்பட்டு தஞ்சோங் பூலாட் தென்கிழக்கில் இரண்டு கடல் மைல் தொலைவில் ஆது மூழ்கியது என அவர் குறிப்பிட்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களின் மதிப்பு சுமார் 10,000 முதல் 20,000 வெள்ளி வரை இருக்கும். மூழ்கிய படகின் உண்மையான மதிப்பை நாங்கள் இன்னும் ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.


