ANTARABANGSA

இஸ்ரேல் வான்தாக்குதலில் ஹமாஸ் தலைவர் ஹனியேவின் மூன்று மகன்கள் பலி

11 ஏப்ரல் 2024, 8:59 AM
இஸ்ரேல் வான்தாக்குதலில் ஹமாஸ் தலைவர் ஹனியேவின் மூன்று மகன்கள் பலி

கெய்ரோ, ஏப் 11 - ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் நேற்று காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை ஹமாஸ் தரப்பும்  ஹனியேவின் குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.

இந்த தாக்குதலை  உறுதிப்படுத்திய  இஸ்ரேலிய இராணுவம், அவரின் மூன்று மகன்களும் ஹமாஸ் ஆயுதப் பிரிவின் செயல்பாட்டாளர்கள் என்று விவரித்தது.

மூன்று மகன்கள் - ஹஸேம், அமீர் மற்றும் முகமது  கொல்லப்பட்டனர்.  காஸாவின் அல்-ஷாதி முகாமில் அவர்கள் ஓட்டிச் சென்ற கார் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர்கள்  கொல்லப்பட்டனர். ஹனியேவின் நான்கு பேரக்குழந்தைகளான மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் தாக்குதலில் பலியானார்கள்.

வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு பேரக்குழந்தைகளைப் பற்றி கேட்டதற்கு, இஸ்ரேலிய இராணுவம் "அது பற்றி இப்போது எந்த தகவலும் இல்லை" என்று கூறியது.

தற்போது கத்தார் நாட்டில் இருக்கும் ஹனியே, காஸாவில் போர் தொடங்கியது முதல்    ஹமாஸின் அனைத்துலக இராஜதந்திரத்தின் கடினமான முகமாக இருந்து வருகிறார்.  கடந்த  நவம்பர் மாதம் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அவரது குடும்ப வீடு அழிக்கப்பட்டது.

எங்கள் மக்களின் இரத்தத்தை விட எனது மகன்களின் இரத்தம் நேசத்திற்குரியதல்ல.  என்று 61 வயதான  ஹனியே கூறினார். அவருக்கு 13 மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளதாக ஹமாஸ் வட்டாரங்களை மேகோள் காட்டி அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று மகன்கள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் முஸ்லீம் நோன்புப் பெருநாள்  விடுமுறையின் முதல் நாளில் காஸா நகரத்தில் உள்ள ஷாதி அகதிகள் முகாமான அவர்களது இல்லத்திற்கு குடும்பமாகச் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆறு மாதங்களுக்கும் மேலான காஸா போர் தொடர்பில் இஸ்ரேல் முன்வைத்த  போர்நிறுத்த முன்மொழிவை ஆய்வு செய்து வருவதாகவும் ஆனால் அது "உறுதியற்றது" என்பதோடு பாலஸ்தீன கோரிக்கைகள் எதையும் பூர்த்தி செய்யவில்லை என்றும் செவ்வாயன்று (ஏப்ரல் 9) ஹமாஸ்  கூறியது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.