கம்பார், ஏப் 11- டயர் வெடித்ததால் பல்நோக்கு வாகனம் (எம்பிவி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி ஒன்றுடன் மோதியதில் மூன்று வங்கதேச ஆடவர்கள் உயிரிழந்த வேளையில் மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளானார்.
இந்த விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) 306.1வது கிலோமீட்டரில் கம்பார் அருகே நேற்று பிற்பகலில் நிகழ்ந்தது.
பிற்பகல் 1.49 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் நாஸா சித்ரா எம்.பி.வி. வாகனத்தில் பயணம் செய்த மூன்று பயணிகளான அப்துல்லா முகமது (வயது 31), அலி அஸ்கர் மற்றும் முகமது சோஹெல் மியா ஆகியோர் சம்பவ இடத்தில் பலியானதாக கம்பார் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது நஸ்ரி டாவுட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நாசா சித்ராவின் ஓட்டுநர் எம்.டி.கோபீர் ஹூசைன் (வயது 32) மற்றும் மூன்று பயணிகளான எம்.டி சைபுல் இஸ்லாம், (வயது 25), எம்.டி. ராஜு மியா (வயது 27) மற்றும் சோஹல் ராணா (வயது 30) ஆகியோருக்கு காயம் ஏற்படவில்லை. எனினும், முகமது சோஹல் (ஸயது 24) என்பவருக்கு வயிறு, தலை மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டது.
அப்துல்லாவைத் தவிர மற்ற அனைவரும் கேமரன்மலையில் தோட்டத் தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விபத்து நிகழ்ந்த போது காரிலிருந்த பயணிகள் அனைவரும் கேமரன் மலையிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போது இடது பின்புற டயர் வெடித்தைத் தொடர்ந்து வாகனம் சறுக்கி இடதுபுறத்தில் உள்ள இரும்புத் தடுப்பில் மோதியது. கட்டுப்பாட்டை இழந்த கார் மீண்டும் இடது தடத்தில் நுழைந்த போது .அதன் மீது அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த இசுஸூ ரக லோரி மோதியது என்றார் அவர்.
இந்த விபத்தில் லோரி ஓட்டுநர் காயமின்றி தப்பியதாகவும்
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக தாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41 (1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.


