கெய்ரோ, ஏப் 8 - பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காகக் காஸா பகுதிக்கு
ஒரு கோடி லிட்டர் எரிபொருளை அனுப்ப ஈராக் நேற்று ஒப்புக்
கொண்டதாகப் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி கூறினார்.
காஸாவில் காயமடைந்த பாலஸ்தீனர்களை அரசாங்க மற்றும் தனியார்
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக ஈராக்கிற்குக் கொண்டு வரவும் ஈராக்
அனுமதித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக காஸாவிலுள்ள மருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு மையங்கள், ரொட்டித் தயாரிப்பு பேக்கரிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பெரும் சுணக்கத்தை எதிர்நோக்கியுள்ளன.
காஸாவை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் படைகள்
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து
தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காஸா போர் தொடங்கியது.
இப்போரில் இதுவரை 33,175 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 75,886 பேர்
காயமுற்றுள்ளதாகப் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.


