ஷா ஆலம், ஏப் 7- நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 8 முதல் 13ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவிருக்கும் 22வது .ஒப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது சிலாங்கூரில் அடிக்கடி விபத்துகள் நிகழும் 30 இடங்கள் மீது மாநில போலீசார் கூடுதல் கவனம் செலுத்துவர்.
இந்த நடடிக்கையின் போது ஈஜோக்-கோல சிலாங்கூர் சாலை, சிரம்பான் நெடுஞ்சாலையின் 407 முதல் 410வது கிலோ மீட்டர் வரையிலான பகுதி, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, மேற்கு துறைமுகச் சாலை, ஜாலான் மேரு, ஜாலான் சாலாக்- சிப்பாங் மற்றும் ஜாலான் செர்டாங் ஆகிய சாலைகளில் கூடுதல் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
சாலைகளில் சீரான போக்குவரத்தைச் உறுதி செய்வதற்காக மாநில சாலை போக்குவரத்து மற்றும் அமலாக்கத் துறையின் 843 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் 11 இடங்களில் வேக கட்டுப்பாட்டு கண்காணிப்பு நடவடிக்கையையும் ஏழு இடங்களில் ஓப் லஞ்சார் சோதனைகளையும் மேற்கொள்வர் என்று அவர் சொன்னார்.
இந்த 22வது ஓப்ஸ் செலாமாட் நடவடிக்கையின் போது சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சாலை போக்குவரத்து இலாகா மற்றும் சாலை ஒப்பந்த நிறுவனங்களும் பங்கேற்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நோன்புப் பெருநாள் சாலை பாதுகாப்பு இயக்க தொடக்க நிகழ்வு மற்றும் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவன காவல் துறை பணியாளர்களுடன் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குச் செல்லும் நிலையில் வாகன அதிகரிப்பு காரணமாக சாலைகளில் விபத்துகள் ஏற்படும் சாத்தியத்தைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாக பிற அமலாக்க நிறுவனங்கள் மற்றும் சாலை ஒப்பந்த நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை நல்கும் நடவடிக்கையும் அமைகிறது என்று அவர் தெரிவித்தார்.


