ECONOMY

கோல குபு பாரு தேர்தல்- வாக்காளர்கள் விவேகத்துடன் முடிவெடுப்பர்- மந்திரி புசார் நம்பிக்கை

7 ஏப்ரல் 2024, 2:34 AM
கோல குபு பாரு தேர்தல்- வாக்காளர்கள் விவேகத்துடன் முடிவெடுப்பர்- மந்திரி புசார் நம்பிக்கை

செலாயாங், ஏப் 7 - கோல குபு பாரு தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களிலும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் விரைவில் நடைபெறவிருக்கும் அத்தொகுதி இடைத்தேர்தலை சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) இலகுவாக எடுத்துக் கொள்ளாது. 

வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான அரசியல் ஆயுதங்கள் இல்லாத நிலையில்,  எதிர்க்கட்சியினர் கூட்டரசு அளவில் உள்ள பிரச்சினைகளுடன்  விளையாடுவார்கள் என்று தாம்  எதிர்பார்ப்பதாக மாநில ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2013 முதல் மாநில அரசின்  பங்களிப்பை பெரும்பான்மையான வாக்காளர்களால்  மதிப்பிட முடியும் என்று நான் நம்புகிறேன். தொகுதியில் நான் எதிர்பார்ப்பது என்னவென்றால்,  சமூகத்திற்குத் திரும்ப வழங்கப்பட்ட நன்மைகள் உட்பட ஆற்றிய சேவைகள் சரியாக மதிப்பீடு செய்யப் படுகின்றனவா  என்பதாகும் என அவர் குறிப்பிட்டார்.

நான் இவ்வாறு சொல்வது  மாநிலப் பிரச்சினைகளைப் பற்றியது மட்டுமல்ல. நிச்சயமாக கூட்டரசுப் பிரச்சனைகளும் கூட.  மாநில அரசாங்கத்தை தாக்குவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வலுவான விஷயங்கள்  இல்லை என்பதால் பொருத்தமற்றதாக இருக்கும் கூட்டரசு விஷயங்களைப் அவர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் நான் எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

இருப்பினும், மாநில சட்டசபையில் கவனம் செலுத்த வேண்டும். எங்களுடன் இணைந்து பணியாற்றக் கூடிய  மற்றும் கூட்டரசு உறவுகளை மேம்படுத்தும் வகையில் செயல்படும் உறுப்பினர்களை நாங்கள் விரும்புகிறோம்  என்று  சொன்னார்.

சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ.) ஏற்பாட்டில்  சுங்கை துவா குடியிருப்பாளர்களுக்கு  நோன்புப் பெருநாள் உதவி நிதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுப்பது என முடிவெடுக்கும் உரிமையை வாக்காளர்களின் விவேகத்திற்கு விட்டு விடுவதாகக் கூறிய அமிருடின், சரியான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்  வாக்காளர்களின் ஆற்றலை குறைத்து மதிப்பிட மாட்டோம் என்றார்.

கோல குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 11ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில்  அறிவித்தது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  ஏப்ரல் 27ஆம் தேதியும்   தொடக்கக் கட்ட வாக்களிப்பு  மே 7ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே தெரிவித்தார்.

ஜசெக பிரதிநிதியான லீ கீ ஹியோங் புற்று  நோய் காரணமாக  கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 58 வயதான லீ,  கடந்த 2013 முதல்  மூன்று தவணைகளாக கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

கடந்த  2022 இல் நடைபெற்ற   நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப்

பிறகு நடைபெறும் ஏழாவது இடைத் தேர்தல் தேர்தல் இதுவாகும்.

கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 40,226 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீஸ்காரர்கள், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.