புது டில்லி, ஏப் 5- இம்மாதம் தொடங்கவுள்ள இந்திய தேசிய தேர்தலில்
வெற்றி பெற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை கொண்டுள்ளார்.
அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை
இரட்டிப்பாகவும் அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
தேர்தல் பிரசாரங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தனது
மிகப்பெரிய சாதனையாக முன்னிலைப்படுத்தி வரும் மோடி, கருத்துக்
கணிப்புகள் கூறுவது போல் மூன்றாவது தவணைக்கும் தாம்
தேர்ந்தெடுக்கப்பட்டால் தற்போது உலகின் ஐந்தாவது இடத்தில் இருக்கும்
இந்தியாவின் பொருளாதாரத்தை மூன்றாவது இடத்திற்கு கொண்டு
வருவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
தற்போது 3.51 ட்ரிலியன் டாலராக (16.6 ட்ரிலியன் வெள்ளி) இருக்கும்
பொருளாதாரத்தை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 6.69 ட்ரிலியன் டாலராக
(31.7 வெள்ளி) உயர்த்துவதற்கான திட்டங்கள் எதிர்வரும் மே மாதத்திற்குள்
இறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டுள்ளதை கடந்த
அக்டோபர் மாதம் வெளியிட்டப்பட்ட ஆவணங்கள காட்டுகின்றன.
எனினும், இந்த இலக்கை அடைவதற்கான தெளிவான விபரங்கள்
வெளியிடப்படவில்லை.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் தவணைக்குப் பிரதமராக
பதவியேற்ற போது, நாட்டின் பொருளாதாரத்தை நடப்பு நிதியாண்டில் 5
ட்ரிலியன் டாலராக (23.7 ட்ரிலியன் வெள்ளி) உயர்த்துவதாக மோடி
வாக்குறுதியளித்திருந்தார். எனினும், கோவிட்-19 பெருந்தொற்று
தொடர்பான இடையூறுகளால் அந்த இலக்கை அடைவது சாத்தியமற்றதாக
ஆனது.
ஒவ்வோரண்டும் உண்மையான உள்நாட்டு உற்பத்தி 6-6.5 விழுக்காடாக
உயர்ந்து பணவீக்கம் 4.5 விழுக்காடாக நிலைப்பெற்று அமெரிக்க
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 1-1.5 என்ற அளவில் சரிவு கண்டால் டாலரின் இயல்மதிப்பளவில் நாட்டின் பொருளாதாரம் ஏழு ஆண்டுகளில்
இரட்டிப்பாக உயரும் என்று பொருளாதார நிபுணரான சவுகாத்தா
பாட்டாச்சாரியா கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை கடந்த மார்ச் 31ஆம்
தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் எட்டு விழுக்காடு வளர்ச்சி
பதிவாகியிருந்தது. வளர்ந்த நாடுகள் மத்தியில் இது விரைவான
வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. அரசாங்க செலவினங்களால் இயக்கப்படும்
வலுவான உற்பத்தி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் இதற்கு
பக்கபலமாக உள்ளன.


