ஹூவாலியன், ஏப் 5 - தைவான் நாட்டை இருப்பத்தைந்து ஆண்டுகளுக்குப்
பிறகு உலுக்கிய மோசமான பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட ஆறு சுரங்கத்
தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட வேளையில் தொடர்பு
துண்டிக்கப்பட்ட மலை ஸ்தல தேசிய பூங்காவை சென்றடைந்த மீட்புக்
குழுவினர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 400 பேரும்
பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்தினர்.
பூகம்பத்திற்குப் பிந்தைய நில அதிர்வுகள் தைவானின் கிழக்கு
பிராந்தியத்தை தொடர்ந்து உலுக்கி வரும் நிலையில் பொது மக்கள்
பாதுகாப்பு கருதி திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தைவானை ரிக்டர் அளவில் 7.2 எனப் பதிவான நிலநடுக்கம் கடந்த புதன்
கிழமை தாக்கிய நிலையில் அந்த பேரிடரில் இதுவரை 10 பேர்
பலியானதோடு மேலும் 1,099 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
நிலநடுக்கம் காரணமாக ஹூவாலியனில் உள்ள உயர்ந்த மலைகளின்
ஊடே செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சுரங்கத்தில்
சிக்கியிருந்த ஆறு தொழிலாளர்களை ஹெலிகாப்படர்கள் மீட்கும் சாகசக்
காட்சியை ஊகடங்கள் பகிர்ந்தன.
அங்குள்ள ஒரு கனடியர், ஒரு இந்தியர் மற்றும் இரு ஆஸ்திரேலியர்கள்
இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட ஹூலியான் நகரிலுள்ள
இடிந்த கட்டிடங்களிலிருந்து அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர். எனினும்
இந்த பூகம்பத்திற்குப் பிறகு ஏற்பட்ட 300க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள்
காரணமாக அங்குள்ளவர்கள் இரவுப் பொழுதை திறந்த வெளிகளில்
கழித்தனர்.


