ஹூவாலியன், ஏப் 4- கிழக்கு தைவானில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,000 பேராக உயர்ந்துள்ளது. இந்த பேரிடரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒன்பதாகப் பதிவாகியுள்ள நிலையில் தேசிய பூங்காவிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த 42 தொழிலாளர்கள் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.2 எனப் பதிவான இந்த நிலநடுக்கம் நாட்டின் கிழக்கு நகரான ஹவாலினின் புறநகர் மற்றும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளை நேற்று காலை உலுக்கியது. கடந்த 25 ஆண்டுகளில் இந்த நாட்டில் ஏற்பட்ட மிகவும் வலுவான நிலநடுக்கம் இதுவென கூறப்படுகிறது.
நாட்டின் தலைநகரான தைப்பேயில் உள்ள கட்டிடங்களும் இந்த பூகம்பத்தின் தாக்கத்தால் கடுமையாக அதிர்ந்தன. எனினும் பாதிப்பு குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பூகம்பத்தில் இதுவரை 1,038 பேர் காயமடைந்துள்ளதாக தைவான் தீயணைப்புத் துறை கூறியது. அதே சமயம், 42 ஹோட்டல் பணியாளர்கள் உள் பட 48 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன ஹோட்டல் பணியாளர்களைக் கண்டுபிடிப்பது தங்களின் தலையாய பணி என்று பேரிடர் மேலாண்மை ஆணை மையம் நேற்று கூறியது. காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்கும் அவர்களின் இருப்பிடம் தெரியும் பட்சத்தில் உதவிப் பொருட்களை விநியோகிப்பதற்கு ஏதுவாக சம்பவ இடத்திற்கு டிரேன்களும் ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் படிப்படியாக கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றனர் என்று அந்த மையம் குறிப்பிட்டது. சுரங்கப் பகுதி ஒன்றில் சிக்கிக் கொண்டிருந்த அறுவரை ஹெலிகாப்டர் இன்று மீட்டது.
ஹூவாலியன் நகரில் இரயில் சேவைகள் திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் முன்கூட்டியே தொடங்கப்பட்டு விட்டன. கடுமையான பாதிப்பு காரணமாக தென் ஹூவாலியன் பகுதியில் உள்ள ஒரு இரயில் நிலையம் மட்டும் இன்னும் மூடப்பட்டுள்ளது.


