காசா, ஏப் 2 - காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட வோர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் (டபள்யூ.சி.கே.) எனும் அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த குறைந்தது ஐந்து ஊழியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்தது.
மத்திய காஸாவின் டெய்ர் அல்-பாலாவில் நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் போலந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் குடிமக்களோடு ஒரு பாலஸ்தீனரும் அடங்குவார் என்று ஊடக அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்
காஸாவில் எங்களின் மனிதாபிமான உணவு விநியோக முயற்சிகளுக்கு ஆதரவாக பணியாற்றும் போது வோர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் தன்னார்வலர் அமைப்பின் உறுப்பினர்கள் ஐ.டி.எஃப். தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்ற தகவலை அறிந்துள்ளோம் என்று டபள்யூ.சி.கே. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இது ஒரு சோகமான நிகழ்வு. மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருபோதும் இலக்காக இருக்கக்கூடாது என அந்த அமைப்பு கூறியது.
இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய இராணுவம், இந்த "துன்பகரமான" சம்பவத்தின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ள உயர்மட்ட மட்டத்தில் முழுமையான ஆய்வு நடத்துவதாக கூறியது.
மனிதாபிமான உதவிகளை பாதுகாப்பாக வழங்குவதற்கு இஸ்ரேலிய தற்காப்புப் படை விரிவான முயற்சிகளை மேற்கொள்கிறது. மேலும் காஸா மக்களுக்கு உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக டபள்யு.சி.கே. அமைப்புடன் அது அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது என்று இராணுவ அறிக்கை குறிப்பிட்டது
இதனிடையே, காஸா சம்பவம் குறித்து வெளியுறவு அமைச்சு அவசர விசாரணை நடத்தி வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் ஏ.பி.சி. ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.


