வாஷிங்டன், மார்ச் 26 - ரமலான் மாதத்தை முன்னிட்டு காஸா
தீபகற்பத்தில் உடனடி போர் நிறுத்தத்தை அமல் செய்ய வலியுறுத்தும்
தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்பு மன்றம் நேற்று ஏற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து உறுப்பு நாடுகள் தாக்கல் செய்த இந்த
தீர்மானத்திற்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்த வேளையில் அமெரிக்கா
வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று அனாடோலு ஏஜென்சி
செய்தி நிறுவனம் கூறியது.
அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்கும் வகையில் ரமலான் மாதம்
முழுவதும் போர் நிறுத்தம் அமல்செய்யப்பட வேண்டும் என அந்த
தீர்மானம் வலியுறுத்தியதோடு நீடித்த போர் நிறுத்தத்தையும் அது
இலக்காகக் கொண்டுள்ளது.
அனைத்து பிணைக்கைதிகளும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை
செய்யப்பட வேண்டும் என்பதோடு மனிதாபிமான மற்றும் மருத்துவ
உதவிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அந்த
தீர்மானம் வலியுறுத்தியது.
தாங்கள் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகள் விவகாரத்தில்
அனைத்துலக சட்டங்களை சம்பந்தப்பட்டத் தரப்பினர் மதித்து நடக்க
வேண்டும் என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
காஸா தீபகற்பம் முழுவதும் விரிவான அளவில் மனிதாபிமான உதவிகள்
சென்றடைவதை உறுதி செய்வது மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை
உறுதி செய்வது ஆகிய இரு முக்கிய அம்சங்களின் உடனடி
அமலாக்கத்தையும் அந்த தீர்மானம் வலியுறுத்தியது.
அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் ஐ.நா.பாதுகாப்பு
மன்றத்தின் தீர்மானத்திற்கு ஏற்ப காஸா தீபகற்பத்திற்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும் எனவும் அந்த தீர்மானம் கோரியது.


