ரெம்பாவ், மார்ச் 25 - பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் (ஐ.நா.) போர்நிறுத்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மீண்டும் தோல்வி கண்டது குறித்து மலேசியா ஏமாற்றம் அடைந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் கூறினார்.
பாலஸ்தீனர்களை விடுவித்து அவர்கள் தாயகம் திரும்புவதை உறுதி செய்வதற்கு கடந்த இரண்டு மாதங்களில் ஐ.நா. பாதுகாப்பு மன்றம் மேற்கொண்ட ஒன்பதாவது முயற்சி இதுவாகும் என்று அவர் தெரிவித்தார்.
சில விஷயங்களை முழுமையாகத் தொடாத காரணத்தால் அமெரிக்கா முன்மொழிந்த இந்த தீர்மானத்தை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா வகைப்படுத்தியது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு என்று வகைப்படுவதை மலேசியா ஏற்கவில்லை. மேலும், பாலஸ்தீனர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை. மாறாக ஹமாஸ் வசமுள்ள பிணைக் கைதிகளை இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது ஹசான், இங்குள்ள கம்போங் சிலியாவ் பாரிஷ் பள்ளிவாசலில் உள்ள சிலியாவ் வாக்குப்பதிவு மாவட்ட மையத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு உணவு கூடைகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக ஐ.நா பாதுகாப்பு மன்றம் அவசர கூட்டத்தை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியா வலுவாக குரல் எழுப்பி வருவதோடு குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார்கள் கொல்லப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது என்றார் அவர்.


