பாரிஸ், மார்ச் 25 - மாஸ்கோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் அரசு தனது பயங்கரவாத எச்சரிக்கையை மிக உயர்ந்தபட்ச நிலைக்கு உயர்த்தியுள்ளது.
அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மூத்த பாதுகாப்பு, தற்காப்பு அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்றச் சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் கேப்ரியல் அட்டல் இதனைத் தெரிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, மாஸ்கோ தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதோடு தங்கள் நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியதன் எதிரொலியாக அமல் செய்யப்படுகிறது என்று அவர் தனது எக்ஸ் பதிவில் கூறினார்.
பிரான்சின் பயங்கரவாத எச்சரிக்கை அமைப்பு மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. பிரான்ஸ் அல்லது வெளிநாட்டில் ஒரு தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அல்லது அச்சுறுத்தலுக்கான உடனடி சாத்தியம் உள்ளதாகக் கருதப்படும் போது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை அமல்படுத்தப்படுகிறது.
ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் சமய வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் ஆயுதப்படைகளின் தீவிர ரோந்து போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இது அனுமதிக்கிறது.


