ஷா ஆலம், மார்ச் 24- சிலாங்கூர் மாநிலத்தில் நேற்றிரவு வரை 11 லட்சத்து 30 ஆயிரம் பேர் முதன்மை தரவுத் தளத்தில் (பாடு) பதிவு செய்துள்ளனர்.
இந்த தளத்தில் தங்கள் தகவல்களைப் புதுப்பிப்பதற்கு வரும் மார்ச் 31 வரை மீதமுள்ள எட்டு நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிலாங்கூர் மாநில மலேசிய புள்ளிவிபரத் துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.
'பாடு'வில் தகவல்களைப் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ளதா? உதவுவோம், வாருங்கள். சிலாங்கூர் வாசிகளே, உங்களுக்கு அருகிலுள்ள 'பாடு' முகப்பிடத்தை அணுகுங்கள் என்று இன்று முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் அது தெரிவித்தது.
இந்த 'பாடு' தகவல் தரவுத் தளத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜனவரி 2 ஆம் தேதி தொடக்கி வைத்தார். இதில் பதிவு செய்வதற்கு மார்ச் 31 வரை அவகாசம் உள்ளது. www.padu.gov.my என்ற இணைப்பின் மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள், குறிப்பாக குடும்பத் தலைவர்கள், இலக்கிடப்பட்ட உதவி அல்லது மானியங்களைப் பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதைத் தவிர்க்க 'பாடு' அமைப்பில் உடனடியாகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
'பாடு' பதிவு காலத்தை நீட்டிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி நேற்று கூறியிருந்தார்.
'பாடு' தளத்தில் பதிவு செய்வதற்காக இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 6 மாவட்டங்களில் 32 முகப்பிடங்கள் திறந்திருக்கும்.


