காஸா நகர், மார்ச் 19 - பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் கடந்தாண்டு
அக்டோபர் 7ஆம் தேதி முதல் இடைவிடாத தாக்குல்களை மேற்கொண்டு
வரும் நிலையில் அந்நாட்டு இராணுவம் கடந்த 24 மணி நேரத்தில்
மேற்கொண்டத் தாக்குதல்களில் மட்டும் 81 பேர் கொல்லப்பட்டதோடு
மேலும் 116 பேர் காயங்களுக்குள்ளாயினர்.
காஸா தீபகற்பத்தில் குடும்பங்களுக்கு எதிராக கடந்த 24 மணி நேரத்தில்
இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட எட்டு தாக்குதல்களில் 81 பேர் வீர
மரணம் அடைந்ததோடு 116 பேர் காயமடைந்தனர் என்று காஸா சுகாதார
அமைச்சை மேற்கோள் காட்டி அனாடோலு செய்தி நிறுவனம்
கூறியுள்ளது.
மீட்பு பணியாளர்கள் செல்ல முடியாத காரணத்தால் மேலும் பலர் கட்டிட
இடிபாடுகளுக்கு மத்தியிலும் சாலைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளனர்
என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
அனைத்துலக நீதிமன்றம் அளித்த உத்தரவை சிறிதும் பொருட்படுத்தாத
இஸ்ரேலிய அரசாங்கம் காஸா தீகபற்பம் மீது தொடர்ந்து தாக்குதல்
நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் இதுவரை 31,726 பேர்
கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள்
மற்றும் சிறார்கள் ஆவர்.
ஹமாஸ் படையினர் எல்லை கடந்து நடத்திய தாக்குதலில் தங்கள்
நாட்டைச் சேர்ந்த 1,200 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இஸ்ரேல் அதற்கு
பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனம் மீது தொடர் தாக்குதல்களை
நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்கள் காரணமாக காஸாவிலுள்ள சுமார் 85 விழுக்காட்டு
மக்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர். அங்குள்ள மக்கள் உணவு,
சுத்தமான குடிநீர் மற்றும் மருந்துப் பற்றாக்குறையைப் பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர். அந்த நாட்டின் 60 விழுக்காட்டு அடிப்படை வசதிகள் சீர்குலைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.


