காஸா, மார்ச் 18- காஸாவின் வடபகுதி நகரான ஜபாலியா ஏறக்குறைய
நான்கு மாதங்களுக்குப் பின்னர் முதல் கட்ட உதவிப் பொருள்களைப்
பெற்றதாக வட்டாரங்களை மேற்கோள் காட்டி அனாடோலு செய்தி
நிறுவனம் கூறியது.
ஜபாலியா, பெய்ட் ஹனோன் மற்றும் பெய்ட் லாஹியா ஆகிய
நகரங்களை உள்ளடக்கிய காஸாவின் வட பகுதிக்கு அத்தியாவசிய
உதவிப் பொருள்கள் அடங்கிய ஒன்பது டிரக்குகள் செல்ல இஸ்ரேலிய
இராணுவம் அனுமதி வழங்கியது.
மாவு, அரிசி, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், சீனி உள்ளிட்ட அந்த
உதவிப் பொருள்கள் காஸா அரசாங்க பாதுகாப்பு படைகளின்
கண்காணிப்பில் ஜபாலியா அகதிகள் முகாம் வந்து சேர்ந்தன.
இந்த உதவிப் பொருள்கள் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.
நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் கிடங்கில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் விதித்த தடைகள் காரணமாக காஸா பகுதியில் 27 பேர் பட்டினி
மற்றும் நீர்சத்தின்மை காரணமாக உயிரிழந்ததாகப் பாலஸ்தீன சுகாதார
அதிகாரிகள் கூறியிருந்தனர்.
கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல்
மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் 31,600க்கும் மேற்பட்டோர்
கொல்லப்பட்டுள்ளதோடு 73,,700 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்களில் பெரும்பாலோர் சிறார்கள்
மற்றும் பெண்களாவர்.
இஸ்ரேலின் இந்த கோரத் தாக்குதல்கள் காரணமாக சுமார் 85 விழுக்காட்டு
பாலஸ்தீனர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.


