தெஹ்ரான், மார்ச் 18 - காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமல் செய்வதற்கான பாலஸ்தீன எதிர்ப்பு இயக்கத்தின் பரிந்துரை நடைமுறைக்கு ஏற்றது மற்றும் பொருந்தக்கூடியது என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கோடிட்டுக் காட்டியுள்ளார் என ஈரானிய செய்தி நிறுவனம் (ஐ. ஆர்.என்.ஏ.) தெரிவித்துள்ளது.
சிஸியோனிச ஆட்சியுடனான ஹமாஸின் மறைமுகப் பேச்சுக்கள் முழுவதும் போரை நிறுத்துவது, அகதிகள் திருப்பியனுப்புவது , மீட்பு முயற்சிகள் மற்றும் காஸாவின் புனரமைப்புத் தொடக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று லெபனானில் பெய்ரூட்டை தளமாகக் கொண்ட மூத்த ஹமாஸ் தலைவர் ஒசாமா ஹம்டன் கூறினார்.
ஹமாஸ் சமீபத்தில் முன்மொழிந்த போர் நிறுத்தத் திட்டம் முற்றிலும் யதார்த்தமானது என்பதோடு எதிரியால் அதை நிராகரிக்க முடியாது என்றும் ஹம்டான் சொன்னார்.
போர்க் கைதிகள் விவகாரங்கள் மற்றும் காஸா பகுதியிலிருந்து ஆக்கிரமிப்புப் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான குறிப்பிடத்தக்க விபரங்களை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இயக்கம் பரிந்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் அதன் முக்கிய ஆதரவாளரின் (அமெரிக்கா) பதிலுக்காக ஹமாஸ் இன்னும் காத்திருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இவ்விவகாரத்தில் இஸ்ரேலிய அமைச்சரவை உறுப்பினர்களிடையே இடைவெளிகளையும் வேறுபாடுகளையும் காண்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய இராணுவத்தின் காஸா மீதான தாக்குதலின் தாக்கத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்கு அறிந்திருப்பதாகக் அந்த ஹமாஸ் அதிகாரி கூறினார். மேலும், இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்த எந்த நோக்கத்தையும் காஸா போரில் அடையவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்துலக சமரசப் பேச்சாளர்களுடனான அனைத்து சத்திப்புகளிலும் காஸா மீதான போரை தவிர்க்குமாறு ஹமாஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.


