மெல்போர்ன், மார்ச் 6 - காஸாவில் நிகழ்ந்து வரும் மோசமான நிலையை எடுத்துரைத்த மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார், மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்திற்குக் கோரிக்கை விடுத்தார்.
சிறப்பு உச்சநிலை மாநாட்டின் கலந்துரையாடல் அமர்வில் பேசிய அன்வார், கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொதுப் பேரவையில் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து ஆசியான் மற்றும் ஆஸ்திரேலியா தலைவர்களுக்கும் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.
இந்த கோரிக்கையை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
நாளுக்கு நாள், காஸாவின் நிலைமை மோசமடைந்து வருவதாக கூறிய அவர், இன்று வரை 12,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 30,000 க்கும் அதிகமான பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளதோடு அப்பாவி குழந்தைகளும் பட்டினியால் அவதியுற்று வருவதாகச் சொன்னார்.
ஆகவே, காஸாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவது இன்றியமையாதது என்று அவர் தெரிவித்தார்.
காஸா முழுவதிலும் உள்ள அப்பாவி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, விரைவான மற்றும் தடையில்லா மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் ஆலோசனை கூறினார்.


