சென்னை, பிப் 28 - நாடு முழுமைக்கும் தனது கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்குப் பயணச் சேவையை மேற்கொள்வதற்குத் தேவையான இருதரப்பு உரிமைகள பெறுவதற்கான சாத்தியங்களை ஏர் ஏசியா விமான நிறுவனம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
நாட்டின் முதன்மை நகரங்கள் விரிவாக்கத்தின் உச்சத்தை எட்டியுள்ளதால் குறைந்த கட்டண விமான சேவைக்கான கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும் என்று ஏர் ஏசியா நிறுவனத்தின் விமான நிலைய மற்றும் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவின் தலைவர் கேசவன் சிவானந்தம் கூறினார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கான இருதரப்பு உரிமைகள் எங்களுக்கு இன்னும் தேவைப்படுகிறது . தற்போது, மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கு இருதரப்பு உரிமைகள் இல்லை. எனவே பயணிகள் சென்னை அல்லது திருச்சிராப்பள்ளி வழியாகத்தான் மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
இருதரப்பு உரிமைகளைப் பெறுவதற்கான முயற்சிக்கு தீவிர மற்றும் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் தேவை என்று சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஏர் ஏசியா ஊடக வட்டமேசை விவாதத்தின் போது அவர் கூறினார்.
இருந்த போதிலும், இந்த விஷயத்தில் இந்திய அரசு அதிக உதவியாக இருந்தது வருகிறது. இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கான இருதரப்பு உரிமைகளை விரைவில் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கேசவன் மேலும் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கம் தனது நாட்டிலுள்ள நகரங்களை நான்கு முக்கிய அடுக்குகளாக அதாவது அடுக்கு ஒன்று, அடுக்கு இரண்டு, அடுக்கு மூன்று மற்றும் அடுக்கு நான்கு என வகைப்படுத்தியுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்நகரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மலேசியாவிற்கு வரும் இந்தியக் குடிமக்களுக்கு விசா விலக்களிப்பை வழங்கும் அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணத்திற்கான தேவை அதிகரித்துள்ளதாகக் கூறிய கேசவன், இவ்வாண்டு இறுதிக்குள் இந்தியாவில் 20 நகரங்களுக்குத் தனது சேவை ஒருங்கமைப்பை விரிவுபடுத்த ஏர் ஏசியா திட்டமிட்டுள்ளது என்றார்.
இந்தியாவில் ஏர் ஏசியாவின் விரிவாக்கத் திட்டம் குறித்து மேலும் கூறிய கேசவன், மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பயணிகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் லங்காவி அனைத்துலக விமான நிலையம் மற்றும் பினாங்கு
அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்குப் புதிய வழித்தடங்களை விரைவில் திறக்க விமான ஏர் ஆசியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றார்.
வலுவான இலக்கு ஒருங்கமைப்பு காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான பயணிகளை இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே பயணிக்க ஏர் ஆசியா உதவியுள்ளது. மேலும் நிறுவனத்தின் வருவாயில் 18 சதவிகிதம் மலேசியா-இந்தியா பயணங்கள் மூலம் பெறப்படுகிறது என்று அவர் கூறினார்.
தற்போது, ஏர் ஏசியா கோலாலம்பூரில் இருந்து திருவனந்தபுரம், சென்னை, திருச்சிராப்பள்ளி, கொச்சி, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், புது டில்லி மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட இந்தியாவின் 14 நகரங்களுக்கு நேரடிச் சேவையை மேற்கொள்கிறது.


