கோலாலம்பூர், பிப் 28 - பாலஸ்தீனத்தில் நீடித்த போர் நிறுத்தம் அமல்
செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசியா மீண்டும்
வலியுறுத்தியுள்ளது.
மேலும் காஸா பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள முடிவில்லா
இரத்தக்களிக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அது
கோரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீனத்தில் இரத்தக்களரி தொடர
வேண்டும் என விரும்புவோர் இஸ்ரேலின் கொடூரச் செயல்களுக்கு துணை
போனவர்கள் ஆவர் என்று வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ
முகமது அலாமின் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை
மன்றத்தின் 55வது கூட்டத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை
வலியுறுத்தி உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.
இந்த மன்றம் குறைந்த பட்சம் தனது அதிகாரத்தை நிறைவேற்ற
வேண்டும். அமைதியாக இருப்பது, செயல்படாமலிருப்பது மற்றும் சிறப்பு
சலுகைகள் வழங்குவது போன்ற மன்றத்தின் நடவடிக்கைகள் அநீதிக்கு
துணை போவதற்கு ஒப்பானதாகும் என அவர் தெரிவித்தார்.
கடந்த 23ஆம் தேதி நான் அங்கிருந்தேன். ராஃபா-காஸா எல்லையில்
நெஞ்சை உருக்கும் வகையிலான பேரழிவுகளை நான் நேரில் கண்டேன்.
உயிர்வாழ்வது மட்டுமே பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய தேவையாக
உள்ளது. அங்கு நான் கண்டவை முடிவில்லா கொடூரக் கனவாவே
உள்ளன என்றார் அவர்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மலேசிய தொடர்ந்து இருந்து வரும்
எனக் கூறிய அவர், கொடூரச் செயல்களைக் கண்டிக்கும் அதே வேளையில் மனுக்குலத்தின் அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் அது தொடர்ந்து போராடி வரும் என்றார்.
நீதி நிலைநாட்டப்படும் வரை மலேசியா ஒருபோதும் ஓயாது.
தண்டனையிலிருந்து விலக்களிக்கும் முறை அகற்றப்பட வேண்டும்
என்பதோடு ஐக்கிய நாடுகள் சபையில் பாஸ்தீனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட
இடம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


