பெட்டாலிங் ஜெயா, பிப் 9: இந்த ஆண்டு திறக்கவுள்ள 19 ரம்ஜான் பஜார் மையங்களில் செயல்படும் 931 வர்த்தகர்களின் விண்ணப்பத்திற்குப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஏற்ப அனைத்து வர்த்தகர்களும் பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என அதன் மேயர் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.
"டிஜிட்டல் & க்ளீன்' என்ற கருப்பொருளுடன், ரம்ஜான் காலம் முழுவதும் 19 இடங்களில் திறக்கப்படவுள்ள 1,243 கடைகளில் கட்டாயம் பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்களுக்கு நாங்கள் அறிவித்துள்ளோம்.
"வியாபாரம் செய்யும் போதும், செய்த பின்னரும், வர்த்தகர்கள் தூய்மையைப் பராமரிக்கவும் நிபந்தனைகளுக்கு இணங்கவும் ஒத்துழைப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.
நேற்று எம்பிபிஜே சிவிக் மண்டபத்தில் 2024 ரம்ஜான் பஜார் அனுமதி பிரமீட்டை வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உணவைக் கையாளும் முறை, ஐ-மூசிம் திட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அனைத்து வர்த்தகர்களுக்கும் விளக்கப்பட்டதாக முகமட் ஜாஹ்ரி கூறினார்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வர்த்தகர்களை மாற்றும் குறிக்கோளுக்கு ஏற்ப மார்ச் 4 ஆம் தேதி வழிகாட்டுதல் மற்றும் உணவைக் கையாளும் பட்டறை இலவசமாகப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளதாக அவர் விளக்கினார்.
"அனைத்து வணிகர்களும் இந்தப் பட்டறையையில் பங்கேற்க நாங்கள் வரவேற்கிறோம், ஏனெனில் இதில் வணிகத்தை மேம்படுத்தவும் கற்றுக்கொள்ளலாம்," என்று அவர் கூறினார்.


