இஸ்லாமாபாத், பிப் 8 - பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு
தினமே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் பிரசார அலுவலகங்களில் இரு
சக்தி வாய்ந்த வெடி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாட்டின்
தென்மேற்கு பாலுச்சிஸதானில் நேற்று நிகழ்ந்த இந்த தாக்குதல்களில்
குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 45 பேர் காயமுற்றதாகப்
போலீசாரும் மருத்துவ அதிகாரிகளும் கூறினர்.
பாலுச்சிஸ்தான் மாநிலத்தின் பிஷின் மற்றும் கிலா சைபுல்லா
மாவட்டங்களில் உள்ள வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களைக்
இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாலுச்சிஸ்தான்
போலீஸ் தலைவர் அப்துல காலிக் ஷேய்க் ஷின்ஹூவா செய்தி
நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பிஷின் மாவட்டத்தில் நிகழ்ந்த முதலாவது தாக்குதலில் 14 பேர்
பலியானதோடு மேலும் 25 பேர் காயமுற்றனர். கிலா சைபுல்லா
மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அடுத்தத் தாக்குதலில் 12 பேர்
பலியானதோடு மேலும் 20 பேர் காயங்களுக்குள்ளாயினர்.
பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பெரும்
எண்ணிக்கையிலான தேர்தல் பணியாளர்களும் கட்சி ஆதரவாளர்களும்
திரண்டிருந்த இடத்தில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அறிந்த பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு
விரைந்துச் சென்று காயமுற்றவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
இந்த தாக்குதலில் மோசமாகக் காயமடைந்தவர்களுக்குச் சிறப்பான
சிகிச்சையை வழங்குவதற்காக அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் கியுட்டா
மாநிலத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இந்த தாக்குதல்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்
கொண்ட அந்நாட்டின் பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் அன்வார் உல்-ஹாக்
காகார், இத்தாக்குதல்களை தாம் வன்மையாக கண்டிப்பதோடு கீழறுப்புச்
செயல்களை முறியடித்து நாட்டில் பொது ஒழுங்கைப்
பாதுகாக்கபோவதாகவும் உறுதியளித்தார்.


