புத்ராஜெயா, பிப் 3- தப்பியோடும் செயல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய நாடு முழுவதும் உள்ள 12 தடுப்புக் காவல் முகாம்களில் உள்ள 2,675 ரோஹிங்கியா சட்டவிரோதக் குடியேறிகளை தனியாக பிரிக்கும் நடவடிக்கையை மலேசிய குடிநுழைவுத் துறை மேற்கொள்ளவுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் அந்த முகாம்களிலுள்ள ஒவ்வொரு புளோக்கிலும் ரோங்ஹியாக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அவர்கள் மற்ற புளோக்குகளில் இந்தோனேசிய மற்றும் வங்காளதேச தடுப்புக் காவல் கைதிகளுடன் தங்க வைக்கப்படுவர் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.
பேராக் மாநிலத்தின் பீடோரில் உள்ள தடுப்புக் காவல் முகாமிலிருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு பிறகு குடிநுழைவுத் துறை மேற்கொள்ளும் கட்டுப்பாட்டு மற்றும் சீரான செயலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதை தடுக்க நாங்கள் விரும்புகிறோம். கூட்டமாக இருக்கும் போது மூர்த்தனத்தைக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அந்த தடுப்புக் காவல் முகாமிலிருந்த சுமார் 313 ரோஹிங்யா கைதிகள் நேற்று முன்தினம் இரவு தப்பியோடினர். அவர்களில் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தப்பியோடியவர்களில் 115 பேர் ரோஹிங்கியாக்கள், 15 மியன்மார் நாட்டினர் மற்றும் ஒரு வங்காளதேசியும் அடங்குவர்.
பீடோர் தடுப்புக் காவல் முகாமில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விவரித்த ருஸ்லின், ரோஹிங்யாக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட அந்த கைதிகள் மிகவும் மூர்த்தனமாக நடந்து கொண்டதோடு கைதிகளின் அறைக் கதவுகள் மற்றும் வேலிகளை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றதோடு தடுக்க முயன்ற 14 குடிநுழைவுத் துறை அதிகாரிகளை கற்களைக் கொண்டும் தாக்கியதாகச் சொன்னார்.
அவர்கள் பின்புற பாதை வழியாக வெளியேறி செம்பனைத் தோட்டத்தைக் கடந்து அருகிலுள்ள நெடுஞ்சாலையை நோக்கி தப்பியோடியதாக அவர் தெரிவித்தார்.


