இஸ்தான்புல், ஜன 24- காஸாவில் போர் நிறுத்தத்தை அமல் செய்வது
மற்றும் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பிணைக்கைதிகளைப் பரிமாறிக்
கொள்வது ஆகியவை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து
மேற்கொள்ளப்படும் என்று கட்டார் கூறியதாக அனாடோலு செய்தி
நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஸா நெருக்கடியில் தொடர்புடைய இரு தரப்புடனும்
பேச்சுவார்த்தைகளும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளரான மஜிட் அல்-
அன்சாரி டோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
பாஸ்தீன மற்றும் இஸ்ரேலிய தரப்புகளுக்கிடையிலான சமரசப் பேச்சுகள்
தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு நெருக்கடியான சூழல்கள்
ஏற்பட்ட போதிலும் அப்பேச்சுக்கள் நிறுத்தப்படவில்லை என்று அவர்
சொன்னார்.
இவ்விவகாரத்தில் கட்டாரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க சில
தரப்பினர் முயன்று வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எனினும், இது
குறித்து விரிவான தகவல்களை அவர் வெளியிடவில்லை.
இந்தப் போரினால் இழப்புகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்கப்
போவதில்லை என அன்சாரி மேலும் கூறினார். இஸ்ரேலின்
தாக்குதல்களை நிறுத்துவதற்கும் காஸா முனைக்கு உதவிப்
பொருள்களைக் கொண்டுச் செல்வதற்கும் உதவி கோரும் பொருட்டு தமது
தரப்பு அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி காஸா மீது
இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் 25,490 பேர்
உயிரிழந்துள்ளதோடு 63,354 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், காஸா மக்களில் 85 விழுக்காட்டினர் குடியிருப்புகளை இழந்து
அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்கள் உணவு, சுத்தமான குடிநீர்
மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியத் தேவைகள் இன்றி பெரும்
இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


