ஷா ஆலம், ஜன 15- இங்குள்ள ஜாலான் புக்கிட் கெமுனிங் 8வது மைல், லோட் 1325/பிபி பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் கால்வாய்களை துப்புரவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கடுமையாக மழை பெய்யும் சமயங்களில் ஏற்படும் திடீர் வெள்ளம் தொடர்பில் அப்பகுதி குடியிருப்பாளர்களிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் முயற்சியில் இந்த துப்பரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழை நீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் நுழைவதைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக கால்வாயை துப்புரவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது என்ற பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு கால்வாய் மண்வாரி இயந்திரத்தைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. நடப்பு மழை காலத்தை கருத்தில் கொண்டு தற்காலிக அடிப்படையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.
வெள்ளம் ஏற்படுவதற்கு வடிகால்களை முறையாக பராமரிக்காதது ஒரு காரணமாக விளங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், வட்டார மக்கள் ஒன்றுபட்டு கோத்தோங் ரோயோங் எனப்படும் கூட்டு துப்புரவு இயக்கம் போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக தங்கள் இருப்பிடங்களில் உள்ள கால்வாய்களை அவ்வப்போது சுத்தம் செய்து வந்தால் இது போன்றப் வெள்ளப் பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்றார்.


