தி ஹெக், ஜன 10 - முற்றுகையிடப்பட்ட காஸா பகுதி மீது இஸ்ரேல்
மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களில் ஊடகவியலாளர்களுக்கு
எதிராக குற்றம் இழைக்கப்பட்டதற்கான சாத்தியம் தொடர்பில் விசாரணை
நடத்தப்பட்டு வருவதை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி.)
உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் போது பாலஸ்தீன ஊடகவியலாளர்கள்
கொல்லப்பட்டது தொடர்பில் ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் போர்டர்ஸ்
(ஆர்.எஸ்.எஃப்.) அமைப்பு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு
பதிவு செய்துள்ளதாக பாலஸ்தீனத்தின் வாஃபா செய்தி நிறுவனம் கூறியது.
பாலஸ்தீனம் மீதான தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும்
விசாரணையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட
குற்றங்களும் உள்ளடங்கும் என்று ஐ.சி.சி. புரோசிகியூட்டர் கரீம் கான்
கூறினார்.
பாலஸ்தீனம் தொடர்பான விசாரணையை ஐ.சி.சி.யின் புரோசிகியூட்டர்
அலுவலகம் இன்று தொடங்கியுள்ளது என்பதை நான் உறுதிப்படுத்த
விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி தொடங்கி
நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றத்தின்
அதிகாரத்திற்குட்பட்டு இந்த விசாரணை நடத்தப்படும் என அவர் மேலும்
சொன்னார்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தற்போது மேற்கொண்டு வரும்
தாக்குதல்களில் இதுவரை 106 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


