இஸ்தான்புல், ஜன 8 - காஸா தீபகற்பத்தில் உள்ள மக்கள் புகலிட
மையங்களில் கடுமையான இட நெருக்கடி நிலவுவதாக ஐக்கிய நாடுகள்
சபையின் (ஐ.நா.) அகதிகளுக்கான நிறுவனம் கூறியது.
குடியிருப்புகளை இழந்தவர்களுக்கு இனியும் அடைக்கலம் தரும்
நிலையில் தாங்கள் இல்லை என்று ஐ.நா.வின் பாலஸ்தீன
அகதிகளுக்கான பணி மற்றும் உதவிப் பிரிவின் தொடர்பு இயக்குநர்
ஜூலித்தே தோமா கூறினார்.
வீடுகளை இழந்து புகலிடம் தேடி வரும் பெரும் எண்ணிக்கையிலான
மக்களுக்கு அடைக்கலம் தரும் அளவுக்கு எங்களிடம் போதுமான
அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பெரும் எண்ணிக்கையிலான
மக்கள் சாலைகளில் உறங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என்று அவர்
சொன்னார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல்
தாக்குதல் நடத்தத் தொடங்கியது முதல் இதுவரை 22,835 பேர்
கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 58,416 பேர் காயடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த தொடர் தாக்குதல் காரணமாக அந்த பிரதேசத்தில் 60
விழுக்காட்டு அடிப்படை வசதிகள் நிர்மூலமானதோடு சுமார் இருபது
லட்சம் பேர் குடியிருப்புகளை இழந்து உணவு, குடிநீர் மற்றும் மருந்துகள்
போன்ற அடிப்படைத் தேவைகள் இன்றி பெரும் இன்னலை எதிர்நோக்கி
வருகின்றனர்.
காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலைப் போர்க் குற்றம்
அல்லது இனப் படுகொலை என அனைத்துலக சட்ட நிபுணர்கள்
வர்ணித்துள்ளனர்.
இக்குற்றங்களுக்காக இஸ்ரேலை அனைத்துலக நீதிமன்றத்தின் முன்
நிறுத்த துருக்கி மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் முயன்று
வருகின்றன.


