கோலாலம்பூர், ஜன 4 - ஈரானின் கெர்மான் பிரதேசத்தில் சுமார் 100 பேரைப்
பலி கொண்ட பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு மலேசியா
அனுதாபம் தெரிவித்துக் கொண்டுள்ளது.
மேலும் 200 பேர் வரை காயமடைவதற்கு காரணமான அச்சம்பவம் குறித்து
மலேசிய ஆழ்ந்த வருத்தம் அடைவதோடு அந்நாட்டிற்கு முழு
ஆதரவையும் புலப்படுத்துகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
எந்த பாவமும் அறியாத அப்பாவி மக்களுக்கு எதிராக கட்டுவிழ்த்து
விடப்படும் வன்முறைகளை மலேசிய வன்மையாகக் கண்டிப்பதோடு
அத்தகையச் செயல்களை கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக
மேற்கொள்ளப்பட்டு வரும் கொடூரத் தாக்குதல்களை உலகம் பார்த்துக்
கொண்டிருக்கிறது. ஆக சமீபத்தில் இரு தினங்களுக்கு முன்னர்
லெபனானிலும் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த பயங்கரவாத த் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் நீதியின் முன்
நிறுத்தப்பட வேண்டும் என தாம் வலியுறுத்துவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட ஈரானிய இராணுவத் தளபதி
குஸாம் சோலேய்மானியின் கல்லறைக்கு அருகே இரு குண்டுகள்
வெடித்ததாக அனைத்துலக ஊடகங்கள் தெரிவித்தன.
அந்த இராணுவத் தளபதியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை
அனுசரிக்கும் வகையில் அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
நிகழ்வில் திரளானோர் கலந்த கொண்டிருந்த போது இந்த குண்டு
வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.


