ஜோஹானஸ்பெர்க், ஜன. 4 - காஸாவில் இஸ்ரேல் நடத்தி வருவதாகக் கூறப்படும் இனப்படுகொலைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தனது வாதத்தை தி ஹேக்கை தளமாகக் கொண்ட அனைத்துலக நீதிமன்றத்தில் (ஐ.சி.ஜே.) அடுத்த வாரம் முன்வைக்கும் என்று வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விசாரணை வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அனாடோலு ஏஜென்சி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நாங்கள் இம்மாதம் 11 ஆம் தேதி அனைத்துலக நீதிமன்றத்தில் ஆஜராவோம். இனப்படுகொலை குற்றத்தின் சிறப்பு நோக்கம் உட்பட அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் ஏன் இந்நடவடிக்கையை எடுக்கிறோம் என்ற வாதத்தை முன்வைப்போம் என்று அவர் சொன்னார்.
சிறப்பு நோக்கம் உள்ளது என்பதை தலைவர்களின் பல அறிக்கைகளின் அடிப்படையில் நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குனர் ஜேன் டாங்கர் கூறினார் .
பல ஆண்டுகளாக பாலஸ்தீன போராட்டத்தை ஆதரித்து வரும் தென்னாப்பிரிக்கா, கடந்த மாத இறுதியில் காஸாவில் இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் இனப்படுகொலைச் செயல்களை விசாரிக்கவும், 1948ஆம் ஆண்டு இனப்படுகொலை மீதான ஜெனிவா மாநாட்டின் அடிப்படையில் தனக்குள்ள கடமைகளை அந்நாடு மீறிவிட்டதாக அவசர அடிப்படையில் அறிவிக்கவும் கோரி அனைத்துலக நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
கடமைகளை மீறும் அனைத்து செயல்களையும் பாலஸ்தீனம் மீதான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அது கோரியுள்ளது.
இதனிடையே, தென்னாப்பிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இஸ்ரேல் அனைத்துலக நீதிமன்றத்தின் முன் ஆஜராகும் என்று இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.


