தோக்கியோ, ஜன 3 - இங்குள்ள ஹனேடா விமான நிலையத்தில் நேற்று
நிகழ்ந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் ஜப்பான்
கடலோர காவல்படை விமானம் சம்பந்தப்பட்ட விபத்து காரணமாக பல
விமான நிறுவனங்கள் 300க்கும் மேற்பட்ட பயணச் சேவைகளை ரத்து
செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக அந்த விமான நிலையத்தின் பல ஓடுபாதைகள்
நேற்று மாலை தொடங்கி பல மணி நேரங்களுக்கு மூடப்பட்டன. இதன்
காரணமாக ஹனேடாவிலிருந்து புறப்பட வேண்டிய 226 விமானச்
சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் 40,000க்கும் மேற்பட்ட பயணிகள்
பெரும் அவதிக்குள்ளாயினர்.
மூன்று ஓடுபாதைகள் இன்று திறக்கப்பட்ட போதிலும் சுமார் 100 விமான
சேவைகள் இன்னும் தடைபட்டுள்ளதோடு 19,000 பேர் பயணத்தை தொடர
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஷின்ஹூவா செய்தி நிறுவனம்
கூறியது.
நியு சித்தோஷே மாநிலத்திலிருந்து 367 பயணிகளுடன் ஹனேடா விமான
நிலையம் வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-350 ரக
விமானம் ஜப்பான் கடலோரக் காவல்படையின் போம்பர்டியர் டேஷ்-8 ரக
விமானத்துடன் மோதியது. இந்த விபத்தில் இரு விமானங்களும் தீயில்
முழுமையாகச் சேதமடைந்தன.
கடந்த 1ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு
உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற கடலோர காவல்படையின்
விமானத்தில் இருந்த ஐந்து பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததோடு அதன்
விமானி கடுமையான காயங்களுடன் உயிர்த்தப்பினார்.


