ஜெருசலம், டிச 29 - உதவிப் பொருட்களை கொண்டுச் செல்லும் வாகனங்களுக்கு இஸ்ரேல் விதித்த தடை காரணமாக காஸா தீபகற்பத்தில் கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலவுவதோடு சுமார் 40 விழுக்காடு மக்கள் பட்டினியால் வாடும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன உதவிப் பணிகளுக்கான ஐ.நா. நிறுவனம் கூறியது.
முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பஞ்சம் நிலவுவதாகக் கூறிய அந்த அமைப்பு கடந்த 83 நாட்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
உயிர்வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் நீர் மற்றும் உணவைத் தேடி மக்கள் போராடும் அவலம் நிகழ்ந்து வருகிறது. இங்கு மேலும் அதிகமான உதவிகள் தேவைப்படுகிறது என்பது நிஜம். இதற்கு தீர்வு காண்பதற்கான ஒரே வழி மனிதாபிமான அடிப்படையிலான போர் நிறுத்தமே என்று அந்த அமைப்பின் காஸா விவகாரங்களுக்கான இயக்குநர் தோமஸ் வைட் தனது எக்ஸ் பதிவில் கூறினார்.
காஸா பகுதிக்கு மேலும் அதிகமான உதவிப் பொருள்களை அனுப்புவதற்கு வகை செய்யும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் கடந்த வாரம் நிறைவேற்றியது.
எனினும், இந்த தீர்மானம் போதாது என்றும் இது ஏறக்குறைய பொருளற்ற ஒன்று என்றும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
காஸா மக்கள் எதிர்நோக்கி வரும் மனுக்குல பேரிடரை அப்பகுதி பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தாக்குதல் மேலும் மோசமாக்கும் என்று அந்த உலக அமைப்பு எச்சரித்துள்ளது.


