கோலாலம்பூர், டிச 27- இன்றிரவு தொடங்கி ஆறு நாட்களுக்கு
நீடிக்கவிருக்கும் பாலஸ்தீன ஆதரவு மறியலின் போது தலைநகர் ஜாலான்
துன் ரசாக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே கூடாரங்கள் அல்லது
எந்த கட்டுமானத்தையும் அமைக்க வேண்டாம் என அதன்
பங்கேற்பாளர்களுக்கு போலீசார் ஆலோசனை கூறியுள்ளனர்.
“பாலஸ்தீனத்திற்கான முற்றுகை“ எனும் தலைப்பிலான இந்த மறியல்
2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதால்
அந்த மறியலின் போது பாதுகாப்பை உறுதி செய்வது காவல் துறையின்
கடமையாகும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ
அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.
பங்கேற்பாளர்களில் யாரேனும் கூடாரங்களை அமைத்தால் அவர்களுக்கு
எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், அதிகாரிகள்
நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கும் பட்சத்தில்
அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் நிர்பந்திக்க மாட்டார்கள் என
உறுதியளித்தார்.
பாலஸ்தீனர்களின் போராட்டம் குறித்து காவல் துறை அனுதாபம்
கொண்டுள்ளதோடு ஆதரவும் அளிக்கிறது. அதே சமயம், பொது ஓழுங்கு
மற்றும் இந்நாட்டிலுள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பாதுகாப்பிற்கு
அதுவே பொறுப்பு என அவர் குறிப்பிட்டார்.
மறியல் நடைபெறும் இடத்தில் அமெரிக்க, சிங்கப்பூர், ஜப்பானிய
தூதரகங்களும் சுற்றுவட்டாரத்தில் மேலும் பல நாடுகளின் தூதரகங்களும்
உள்ளன. ஆகவே. இப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வது போலீசாரின்
கடமையாகும் என மறியல் நடைபெறும் இடத்தில் இன்று நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.
மறியல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்புக்காக போலீசார்
நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தற்போதைக்கு அந்த எண்ணிக்கை
போதுமானதாக உள்ளது என்றார்.
சுமார் இருபதாயிரம் பேரை பலிகொண்ட காஸா போர் குறித்த தங்களின்
கவலையை வெளிப்படுத்தும் விதமாக இந்த மறியலை பாலஸ்தீன
ஒருமைப்பாட்டுச் செயலகம் ஏற்று நடத்துகிறது.


