MEDIA STATEMENT

மூன்று செகி ஃப்ரெஷ் பேரங்காடிகளில் இன்று ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

23 டிசம்பர் 2023, 3:17 AM
மூன்று செகி ஃப்ரெஷ் பேரங்காடிகளில் இன்று ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

ஷா ஆலம், டிச 23- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஆதரவிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று  மூன்று செகி ஃப்ரெஷ் கிளைகளில் நடைபெறவிருக்கிறது.

கோழி, மீன், அரிசி உள்ளிட்ட சமையல் பொருள்களை மலிவான விலையில் பொது மக்கள் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இந்த விற்பனை கோல குபு பாரு, சவுஜானா உத்தாமா மற்றும் பந்திங் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று அப்பேரங்காடி தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செகி ஃப்ரெஷ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

இந்த விற்பனையில் கோழி ஒரு கிலோ 6.99 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் சியாகாப் மீன் ஒன்று 7.00 வெள்ளிக்கும் டி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கோதுமை ஒரு பாக்கெட் 2.00 வெள்ளிக்கும் சமையல் எண்ணெய் 5 கிலோ 25.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ். மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.

சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி ஃப்ரெஷ் பேரங்காடி  கூறியது.

இந்த ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை நடத்த மாநில அரசு இதுவரை 4 கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 2,850 இடங்களில் நடத்தப்பட்ட இந்த விற்பனை மூலம் சுமார் 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.