புத்ராஜெயா, டிச 19 - பாலஸ்தீன மக்களின் புகலிடமாகவும்
நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மையமாகவும் விளங்கி வந்த கமால்
அட்வான் மருத்துவமனை மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்
நடத்திய கொடூரத் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
சுகாதார வசதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் பாலஸ்தீன
மக்களை கூண்டோடு அழிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும் என
வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) அறிக்கை ஒன்றில் கூறியது.
காஸா மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் அனைத்துலகச் சட்டத்தின் கீழ்
போர்க் குற்றமாகக் கருதப்படுகிறது. வாழ்வதற்கும் தங்களின் எதிர்காலத்தை
தீர்மானிப்பதற்கும் அப்பகுதி மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகள்
மீறப்பட்டுள்ளன என்று அது தெரிவித்தது.
போரில் சிக்கிய மக்களுக்கு உரிய பாதுகாப்பும் அவர்களின்
சுயகௌரவமும் உறுதி செய்யப்பட வேண்டும் என 1949ஆம் ஆண்டு
ஜெனிவா பிரகடனமும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களும்
கூறுகின்றன.
போரில் கொல்லப்பட்டவர்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வது
இதில் அடங்கும். இது தவிர, காஸா மக்கள் மனிதாபிமானத்தோடு
நடத்தப்பட வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும்
உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என அந்த அறிக்கை வலியுறுத்தியது.
பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு உடனடியாக முடிவு
கட்டுவதற்கும் இனியும் உயிர்கள் பலியாகாமல் தடுப்பதற்கும்
அனைத்துலக சமூக இயன்ற அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க
வேண்டும் என மலேசியா கேட்டுக் கொண்டது.


