ECONOMY

உயர் போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட  விபத்து மீதான  விசாரணை விரைவுபடுத்தப்படும்

17 டிசம்பர் 2023, 2:41 AM
உயர் போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட  விபத்து மீதான  விசாரணை விரைவுபடுத்தப்படும்

ஈப்போ, டிச 17 - மேருவில் உள்ள ஜாத்தி தேசியப் பள்ளிக்கு அருகே நேற்று முன்தினம்  நிகழ்ந்த மாணவர் ஒருவரை உட்படுத்திய சாலை விபத்தில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் மூத்த காவல்துறை அதிகாரி தொடர்பான விசாரணையை போலீசார் விரைவுபடுத்துவார்கள்.

இந்த வழக்கை உடனடியாக நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று  பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது  யூஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார்

சந்தேக நபர் நேற்று  முதல் மூன்று நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விசாரணையை விரைவில் முடித்து வழக்கை  அரசு துணை  வழக்கறிஞரிடம் ஒப்படைப்போம் என்று அவர்  தாமான் செபோர் செந்தோசாவில் உள்ள உயிரிழந்த அந்த மாணவனின்  குடும்பத்தினரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

விபத்து  நிகழ்ந்தப் பகுதியிலுள்ள  கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாங்கள் ஆராய்ந்து வருவதோடு வாகனங்களின்  டாஷ்போர்டு கேமராக்களில் இருந்து காட்சிகளைப் பெறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக  முகமது யூஸ்ரி மேலும் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் நாங்கள் பல்வேறு கோணங்களில் விசாரிப்போம். இதில் எந்த சமரசமோ யாரையும் பாதுகாக்கும் முயற்சியோ  இருக்காது. அனைவருக்கும் நீதி கிடைக்க வெளிப்படையான விசாரணை நடத்துவதே எங்கள் கடப்பாடாகும்  என்றார் அவர்.

44 வயது சந்தேக நபர் ஓட்டிச் சென்ற பெரேடுவா அத்திவா காரும் மற்றும் மாணவர் ஓட்டிச் சென்ற யமஹா மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து நேற்று முன்தினம்  மதியம் 12.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர்  ஏசிபி யாஹ்யா ஹசான் முன்னதாகக் கூறியிருந்தார்.

இந்த விபத்தில் சிக்கிய முகமது ஜஹாரிப் அஃபெண்டி முகமது ஜம்ரி, (வயது 17) என்ற அம்மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதே நேரத்தில் கெடா மாநிலப் போலீஸ் தலைமையகத்தில் பணிபுரியும் கார் ஓட்டுநர் எந்த காயமும் இன்றி தப்பினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.