புது டில்லி, டிச 14 - இந்திய நாடாளுமன்ற லோக் சபையின் பார்வையாளர்
மாடத்தில் இரு ஆடவர்கள் அத்துமீறி நுழைந்து பார்வையாளர் மாடத்தில்
தாவிக் குவித்ததைத் தொடர்ந்து அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது.
இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில்,
அதேநாளில் மற்றுமொரு அசம்பாவிதம் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது. அத்துமீறி
உள்ளே நுழைந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரு ஆடவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக லோக் சபாவில் கூட்டத்தை வழி நடத்திக் கொண்டிருந்த ராஜேந்திர அகர்வால் செய்தியாளர்களிடம் கூறினார்.
மக்களவையில் இன்று அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில்
அமர்ந்திருந்த இரு இளைஞர்கள் திடீரென தடுப்புகளை தாண்டி அவைக்குள் குதித்தனர்.
உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகள் மற்றும் மேசைகள் மீது தாவிச் சென்ற
அவர்கள் மர்மப் பொருட்களை வீசியெறிந்தனர்.
அதில் இருந்து வாயு வெளியேறியது. அந்த இளைஞர்கள் இருவரையும் எம்.பி.க்களே சுற்றி
வளைத்துப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. ராகுல்காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு நின்றதைப் பார்க்க முடிந்தது.
மக்களவை உடனடியாக ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
மக்களவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பார்வையாளர் பகுதியில் இருந்து 2 இளைஞர்கள் திடீரென குதித்து உள்ளே வந்தனர். அவர்கள் ஏதோ ஒன்றை வீசினர். அதில் இருந்து வாயு வெளியேறியது.
அவர்கள் இருவரையும் எம்.பி.க்களே வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை, பாதுகாப்புப் படையினர் வெளியே கொண்டு வந்தனர். சபை மதியம் 2 மணி
வரை ஒத்திவைக்கப்பட்டது என்றார்.
இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு அத்துமீறலாகும், ஏனென்றால் 2001ம் ஆண்டில் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதலில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களின் நினைவு தினத்தை இன்று அனுசரிக்கிறோம் என்று அவர் கூறினார்.


