ANTARABANGSA

வட மியன்மாரில் சிக்கிக் கொண்ட 121 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்

1 டிசம்பர் 2023, 3:34 AM
வட மியன்மாரில் சிக்கிக் கொண்ட 121 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்

சிப்பாங், டிச 1-  வட மியன்மாரின் லவுக்கேங்கில்  ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக  அங்கு சிக்கித் தவித்த மொத்தம் 121 மலேசியர்கள் சிறப்பு மீட்புப் பணியின் மூலம் நேற்று வெற்றிகரமாக தங்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இருபது முதல் 50 வயதுக்குட்பட்ட இவர்களில்  பெரும்பாலோர் வட மியன்மாரில் வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலால் ஏமாற்றப்பட்டவர்களாவர்.

இவர்கள் அனைவரும் சீனாவின் குன்மிங்கில் இருந்து சிறப்பு ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் ஒரு இந்தோனேசியரும் அடங்குவார்.

கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய உள்நாட்டுப் போரின் காரணமாக  லவுக்கேங்கில் சிக்கித் தவித்த 128 மலேசியர்களில் மீட்கப்பட்ட இந்த 121 பேரும் அடங்குவர் என்று  துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முகமது அலாமின் கூறினார்.

கோலாலம்பூர் அனைத்துலக  விமான நிலையத்தில்  அவர்களை  வரவேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

குறிப்பிட்ட சில காரணங்களால்  இன்னும் ஏழு பேரை அங்கிருந்து  அழைத்து வர முடியவில்லை. ஆனால் நடப்பு நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களில்  இருவர் மீட்பு நடவடிக்கையிலிருந்து  விலக்கு அளிக்கும்படி அல்லது தாயகம்  திரும்பும் முயற்சியிலிருந்து விலகிக் கொள்வதாக  கேட்டுக் கொண்டுள்ளனர்.  சீனாவில் கிரிமினல் பதிவு  காரணமாக ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஒருவர் சீன எல்லையிலிருந்து 1,000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தார். மேலும் இருவர் குறிப்பிட்ட இடத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தேரத்தில் வரவில்லை என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.