காஸா, நவ 28 - காஸா பகுதியில் அமல்படுத்தப்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று கட்டார் நேற்று அறிவித்துள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) கூறியது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீனத்தை
முற்றுகையிடப்பட்ட பிறகு முதன் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், இந்த போர் நிறுத்த நீட்டிப்பை ஜோர்டானின் வெளியுறவு மற்றும் புலம் பெயர்ந்தோர் அமைச்சு வரவேற்றதாக ஜோர்டானிய செய்தி நிறுவனம் (பெட்ரா) தெரிவித்துள்ளது.
இந்த இலக்கை அடைய எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து கட்டார் மேற்கொண்ட அரசதந்திர முயற்சிகளை அமைச்சு பாராட்டியது.
காஸா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை உறுதி செய்வதற்கும்
இந்தப் போர் நிறுத்த நீட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுஃப்யான் குடா தெரிவித்தார்.
இந்த சண்டையில் இது வரை சுமார் 15,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6,150 சிறார்கள் மற்றும் 4,000 பெண்களும் அடங்குவர். மேலும் 36,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


