புக்கிட் காயு ஹீத்தாம், நவ. 28 - பாலஸ்தீனத்தின் காஸாவில் ஹமாஸ் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டினரை பாதுகாப்பாக விடுவிக்க உதவிய மலேசிய அரசாங்கத்திற்கு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தாவிசின் நன்றி தெரிவித்ததாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தாய்லாந்து நாட்டின் சடாவோவிற்குத் தாம் நேற்று மேற்கொண்ட ஒரு நாள் பணி பயணத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் ஸ்ரேத்தாவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்ததாக அன்வார் கூறினார்.
ஹமாஸ் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினரைப் பாதுகாப்பாக விடுவிப்பதில் எங்களின் முயற்சிகளுக்குப் பிரதமர் ஸ்ரேத்தா தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம் என்று நான் சொன்னேன். ஆனால் ஹமாஸ் மற்றும் எகிப்தின் பெருந்தன்மைதான் தாய்லாந்து பிரஜைகளின் விடுதலைக்கு வழி வகுத்தது என்று அவர் தெரிவித்தார்.
இங்குள்ள குடிநுழைவு, சுங்க, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ஐ.சி.கியூ.எஸ்.) மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
முன்னதாக, ஹமாஸ் பிடியில் இருந்த மேலும் மூன்று தாய்லாந்து பிரஜைகள் காசாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலியப் படைகளுடனான நான்கு நாள் போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து பிரஜைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், தெற்கு தாய்லாந்தில் நிலவும் பதற்றம் குறித்து கருத்துரைத்த அன்வார், இது அந்நாட்டின் உள்விவகாரம் என்றாலும், பதற்றத்தைத் தணிப்பதில் உதவும் கடப்பாடு தங்களுக்கு உள்ளதாக மலேசியா கருதுகிறது என்றார்.
தென் தாய்லாந்தில் உள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தாய்லாந்து சட்டங்களுக்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை முறை, மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்ற முடியும் என்று அவர் கூறினார்.


