காஸா நகர், நவ 23 - காஸா பகுதியில் கடந்த அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,532 ஆக உயர்ந்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 6,000 சிறார்கள் மற்றும் 4,000 பெண்களும் அடங்குவர் என முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உள்ள ஊடக அலுவலகம் நேற்று தெரிவித்தது.
மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களின் மரண எண்ணிக்கை 205ஆக உயர்ந்துள்ளது என்று அனடோலு செய்தி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 25 பொது பாதுகாப்புப் படை உறுப்பினர்களும் 64 ஊடகவியலாளர்களும் அடங்குவர்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,000-க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறிய அந்த அலுவலகம், அவர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறார்கள் மற்றும் பெண்கள் எனத் தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதல் தொடங்கியது முதல் காஸா பகுதியில் குறைந்தது 7,000 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் நிலை தெரியவில்லை. இடிபாடுகளுக்கு அடியில் அல்லது தெருக்களில் அவர்களின் உடல்கள் கிடக்கலாம் என்று ஊடக அலுவலகத்தை மேற்கோள் காட்டி அனடோலு தெரிவித்தது.
தாக்கப்பட்ட அரசாங்க கட்டிடங்களின் எண்ணிக்கை 102 பள்ளிகளுடன் சேர்த்து 266 ஆக உயர்ந்தது. அவற்றில் 67 கட்டிடங்கள் இப்போது சேவையில் இல்லை.
மேலும், 85 மசூதிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதோடு 174 மசூதிகள் சேதமடைந்துள்ளன. மூன்று தேவாலயங்களும் குறிவைக்கப்பட்டன. இவை தவிர, 45,000 வீடுகள் முழுமையாக இடிக்கப்பட்ட நிலையில் 233,000 வீடுகள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.


