சான்பிரான்சிஸ்கோ, நவ. 17- இஸ்ரேலின் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலுக்கு மத்தியில் காஸா பகுதியில் நடக்கும் ரத்தக் களரி குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உரையாற்றினார்.
காசாவில் நடப்பது தார்மீகப் பொறுப்பு கைவிடப்படுகிறது என்பதை தெளிவாகப் புலப்படுத்துகிறது. இது பேரழிவுகளை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கிறது என்று அவர் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) நாடுகளின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கலந்துரையாடல் மற்றும் மதிய உணவு நிகழ்வின் போது அவர் கூறினார்.
இந்நிகழ்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பொருளாதார உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதல்களில் இதுவரை 7,800 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 11,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 29,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோவிற்கு வந்ததிலிருந்து, பாலஸ்தீனத்தின் மனிதாபிமான நெருக்கடி குறித்து அன்வார் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார்.
பாலஸ்தீனத்தில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி பாலஸ்தீனம் அல்லது பரந்த மத்திய கிழக்கை மட்டுமல்ல, பல ஆண்டுகளாக உலக உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
இவை சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்கள் என்று இவ்வார தொடக்கத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 'வல்லரசுகளுக்கிடையிலான போட்டி மற்றும் ஆசிய பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் பதட்டங்கள்' எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்பு விரிவுரையில் அன்வார் கூறினார்.
வளர்ந்த நாடுகள் பொறுப்பை ஏற்கும் அதேவேளையில் வளரும் நாடுகளுக்கு அதிகார மாற்றத்தில் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது, வளரும் நாடுகளில் இருந்து அதிகார மாற்றத்திற்குத் தேவையான சரியான ஆதரவை வளரும் பொருளாதாரங்கள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் பெறவில்லை. நியாயமான மற்றும் சமமான மாற்றத்தை உறுதி செய்வது முக்கியமானது என்று அவர் கூறினார்.


