நியுயார்க், நவ 17- டெய்ர் அல் பாலா எனுமிடத்தில் செயல்பட்டு வந்த
அஸ்- ஸலாம் பாலஸ்தீன் கோதுமை ஆலை அண்மையில் இஸ்ரேல்
மேற்கொண்ட வான் தாக்குதலில் தரைமட்டமானதாக ஐ.நா.வின்
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம்
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
காஸா பகுதியில் இயங்கி வந்த கடைசி கோதுமை ஆலை இது என்று
ஜோர்டானிய செய்தி நிறுவனமான பெத்ரா தெரிவித்தது.
இந்த தாக்குதல் காரணமாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோதுமையைப்
பெறுவதற்கான வாய்ப்பு காஸாவில் இனி கிடைக்காது எனக்
கூறப்படுகிறது.
இதனிடையே, இஸ்ரேல் நிர்ணயித்த வழித்தடம் வழியாகத் தப்பிச் செல்ல
முயன்ற சில அகதிகளை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்ததாக அந்த
செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்த குடியிருப்பாளர்கள் சிலர் தாக்கப்பட்டு
நிர்வாணப்படுத்தப்பட்டதாக சாட்சிகள் சிலரை மேற்கோள் காட்டி
உறுதிப்படுத்தப்படாதத் தகவல்கள் வெளியாகின.
இந்த தாக்குதல்களில் சுமார் 15 லட்சம் பேர் குடியிருப்புகளை
இழந்துள்ளதோடு 813,000 பேர் 154 ஐ.நா.வின் அகதிகளுக்கான
முகாம்களில் தங்கியுள்ளதாகப் பெத்ரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.


