ஷா ஆலம், நவ 16- உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் வரும் டிசம்பர்
1ஆம் தேதி தொடங்கி தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில்
இலக்கவியல் கார் நிறுத்த கட்டண முறையை அமல்படுத்தவுள்ளது.
ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி.) மற்றும் ஃப்ளெக்ஸி பார்க்கிங்
செயலி வாயிலாக இந்த விவேக கட்டண முறை அமல்படுத்தப்படும்
என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இந்த கட்டண வசூல் முறை கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும்
என்றும் முதல் கட்டமாக வரும் டிசம்பர் முதல் தேதி தொடங்கி புக்கிட்
பெருந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசாவில் இத்திட்டம்
அமல்படுத்தப்படும் என்றும் அது தெரிவித்தது.
அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் பத்தாங் காலி மற்றும் கோல
குபு பாரு ஆகிய பகுதிகளில் இந்த கட்டண முறை அமலுக்கு வரும் என்று
நகராண்மைக் கழகம் அந்த பதிவில் குறிப்பிட்டது.
இப்பகுதிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.00 மணி தொடங்கி
மாலை 6.00 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படும். மாதாந்திர
அடிப்படையில் வெ.50 வெள்ளி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சனி,
ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணம் வசூலிக்கப்படாது.
இந்த கார் நிறுத்தக் கட்டண முறை தொடர்பில் மேல் விபரங்களைப்
பெற விரும்புவோர் 1-700-819-612/ 03-60641331 இணைப்பு 135 என்ற
இணைப்பில் தொடர்பு கொள்ளலாம்.


